சிறுவர் கதைகள்

பீர்பாலின் புத்திசாலித்தனம் 

                 பீர்பால் அறிவாற்றலும்  புத்திகூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும் தமது  அறிவுத்  திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு,பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது .
      அதனால் ஒரு கடிதத்துல மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன்   தங்களுக்கு நலன்கள்  பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக,தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதி கையெழுத்துப் போட்டு தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.
       கடிதத்தைப் படித்த  அக்பர் திகைத்து ,ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வலம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றி வினவினார்.
          அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை படித்தார் பீர்பால் .
          பீர்பால் நீண்ட சிந்தனைக்கு பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார்.
          பிறகு அக்பர்,பீர்பாலிடம் ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்? என்று வினவினார்.
    அதற்கு பீர்பால்,மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன் என்றார்.
        



       பீர்பால் வீட்டுக்கு சென்று ஒரு மண் குடத்தை எடுத்து, ஒரு பூசணிக்கொடியில் காய்த்திருந்த பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோடு மண் குடத்திற்குள் வைத்தார். பிறகு வைக்கோலால் குடத்தை மூடினார்.
           நாளாக நாளாக பூசணிப்பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.
           இப்போது அந்தக்குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம், குடத்தின் வாயோ  உள்ளே இருக்கும் பூசணிக்காயை  விட   மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தாய்? என்றார் .

                பீர்பால் அதை விளக்கி விட்டு, அந்த பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு அதிசயம்னு அனுப்ப சொன்னார்.
             அக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார்.
              கடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். அதில் ''நீங்கள் கேட்டது போலவே ஒரு குடம் அதிசயத்தை அனுப்பியிருக்கேன் '' என எழுதியிருந்தார். 
             குடத்தின் மேல் உறையை பிரித்தார் காபூல் அரசர். அதை அவரால் நம்பமுடியவில்லை. காரணம் குடத்தின் வாயோ சிறியது, அதற்குள் எப்படி பெரிய பூசணிக்காய் வைத்தார் என்று அவருக்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு இருந்தார்.
        அடுத்த நாள் காபூல் அரசன் அக்பரை காண புறப்பட்டார் .இரண்டு நாட்களுக்கு பிறகு அக்பரை சந்தித்து அதிசயம் பற்றி வினவினார். அதற்கு அக்பர் இதை நான் சொல்வதை விட பீர்பால் சொன்னால் நன்றாக இருக்கும் என்று, வீரர்களிடம் பீர்பால் பற்றி வினவினார். அதற்க்கு அவர்கள் பீர்பால் பயிற்சிகூடத்தில் இருப்பதாக கூறினர்.
             சிறுது நேரத்திற்கு பிறகு அக்பர் மற்றும் காபூல் அரசன் இருவரும் பயிற்சி கூடத்திற்கு சென்றனர். அங்கே பீர்பாலை சந்தித்தனர். பீர்பாலும் அதை எவ்வாறு செய்தார் என்று விளக்கினர்.
    அதைக்கேட்ட காபூல் அரசன் பீர்பாலின் புத்திக்கூர்மையை எண்ணி வியந்தார்.