சிறுவர் கதைகள்



                                                            இடம் கொடுத்து இறந்த சீலைப்பேன் 

                              ஒரு ராஜா, அவர் பஞ்சணையில் மந்த விசர்ப்பணி என்னும் ஒரு சீலைப்பேன் நெடுநாளாக வாசம் பண்ணிக்கொண்டிருந்தது . ஒரு நாள் எப்படியோ ஒரு மூட்டுப்பூச்சி வந்து சேர்ந்தது. 

சீலைப்பேனுக்கு திக் கென்றது

நீ எங்கே வந்தாய்? போய்விடு'' என்றது சீலைப்பேன். 

''ஏன்? ராஜாவின் பஞ்சணை உனக்கு மட்டும் தான் சொந்தமா?'' என்று திருப்பிக் கேட்டது  மூட்டுப்பூச்சி.மகாராஜாவே மக்களுக்குச் சொந்தம் ; அவர் பஞ்சணை இதுக்கு மட்டும் சொந்தமா என்ன? 

''நீ பொல்லாதவன், முட்களைப் போன்ற பற்களினால் துங்குவதற்கு முன்பே துடுக்காய்க் கடிப்பவன். சமயம் தெரியாதவனாதலால் ராஜாவின் படுக்கையில் இருக்கத்தக்கவனல்ல, இவ்விடம் விட்டுப் போய்விடு'' என்று பரபரத்தது சீலைப்பேன். அதற்கல்லவா தெரியும் தினமும் பக்குவமாக நாளைத்தள்ளி வருவதில் உள்ள சிரமம்! 

ஆனால், கெட்டிக்கார மூட்டுப்பூச்சி சட்டென்று அதன் காலைப் பற்றிக்கொண்டு, ''நான் அப்படிச் செய்யவில்லை; 
நீ சொன்னபடியே கேட்பேன்'' என்று கெஞ்சியது . இராஜரத்தம் கிடைப்பது இலேசா? எந்த ஜென்மத்துப் புண்ணியமோ இப்போது கிட்டியுள்ளது. கெஞ்சுவதற்குத் தயங்கினால் அரசனது  ரத்தம் தன் வயிற்றுக்குக் கஞ்சியாகுமா? 

காலைப் பிடித்துவிட்டதால் கருக்காகப்பேச முடியவில்லை சீலைப்பேனால். 

''சரி! நீ வெடுக்கென்று கடிக்கக் கூடாது''.

''கடிக்க மாட்டேன்''. ''நித்திரை செய்யும்போதுதான் மெத்தென்று வலிதெரியாமால்  மெல்லக் கடிக்க வேண்டும்''.

 ''அப்படியே செய்கிறேன்'' 

''கொஞ்சமாகத்தான் ரத்தம் குடிக்க வேண்டும்''.

 '' கொஞ்சமேபோதும்''

 '' சரி அப்படியானால் இரு''  என்றது சீலைப்பேன்.

  சொல்லிவாய் மூடவில்லை; 

அரசர் களைப்போடு வந்து பஞ்சணையில் அமர்ந்தார்.  இரவுப்போது ஆதலால் உறங்குவதற்கு பத்து நிமிடம்  ஆகி இருக்காது. 

மூட்டுப்பூச்சி நறுக்கென்று கடிக்க ராஜா திடுக்கென்று எழுந்துகொண்டார்.

சேவகர்களை அழைத்து ''ஏதோ கடித்தது , பார்'' என்றார். 

சேவகர்கள் போர்வை உள்பட அனைத்தையும் கூர்மையாகச் சோதித்தார்கள்.

 மூட்டுப்பூச்சி  கட்டிலின் இடுக்கிலே ஒடி புகுந்து கொண்டது. 

ஆனால் சீலைப்பேன் சிக்கிக்கொண்டது.  போர்வையோடு ஒட்டியிருந்ததால் சேவகரின் பார்வையில் பட்டுவிட்டது

அடுத்த கணம் அந்தோ பரிதாபமாக, நசுக்கப்பட்டு இறந்தது. அந்தச் சீலைப்பேன், அடைக்கலமும் ஆபத்தாகும் என்பதை  போல்.