தகவல் சுரங்கம்



                                                                                   ரேடார்

                                       ''ரேடார்' பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவை என்னென்ன பணிகளுக்குப் பயன் படுத்தப்படுகின்றன என்று தெரியுமா? விமான, கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு, புயல், சூறாவளி தோன்றும் அறிகுறிளைக் கவனித்தல், கிரகங்கள், வால் நட்சத்திரங்களின் இயக்கத்தைக்  கவனித்தல் ஆகிய முக்கியமான பணிகளை ரேடார்செய்கிறது.

 இரண்டாம் உலகப் போரின்போதுதான் ரேடார் பிறந்தது. தற்போது ராணுவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது ரேடார். முதன் முதலில் அயனி மண்டல ஆய்வுக்கு ரேடார் பயன்படுத்தப்பட்டது. பிறகு வானிலை ஆய்வுக்கு உபயோகிக்கப்பட்டது. இந்த வானிலை ரேடார்கள் மேகத்திரள், புயல் முனைகள், காற்றழுத்த மண்டலம் ஆகியவற்றின் இடம், நகரும் திசை ஆகியவற்றைக் கண்டறிந்து கூறுகின்றன. 

புயல் தோன்றும் இடம் , வேகம், வரும் திசை இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வானிலை நிலையங்களுக்கு அறிவிக்கின்றன. இவை சொல்லும் தகவல்களை பிரதானமாகக் கொண்டுதான் வானிலை அறிவிப்புகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மழை, பனி ஆகியவற்றின் விகித அளவுகளையும் இது தெரிவிக்கிறது.


விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்க ஒருவகை ரேடார் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து போய்ச் சேரும் இடம் வரை ரேடாரினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் ஒடு பாதையில் விமானங்கள் இறங்க, புறப்பட, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு இவற்றுக்கு ரேடார் துணை  புரிகிறது.


தவிர விமான அதன் வழியில் விலகாது செல்லவும் துல்லியமாக வழிகாட்டுகிறது. விமானம் இறங்கும்போது ஒடுபாதையில் இருந்து விலகிச் சென்றால் உடனே தெரிந்து கொண்டு, விமானிக்குத் தெரிவித்து உடனே மீண்டும், உரிய பாதைக்குத் திரும்பும்படி செய்வதும் ரேடார்தான்.  இந்த ரேடார், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கம்ப்யூட்டர், விமானம் தனது பாதையில் இருந்து விலகிச் செல்வதை அறிந்தவுடன் விமானத்தை சரியான பாதைக்கு திரும்பி வருமாறு  செய்யும். இந்த அமைப்புக்கு தானியங்கி தரைகட்டுப்பாட்டு அணுகு வழி ரேடார் அமைப்பு என்று பெயர். 


 பாதுகாப்புத் துறையில் ரேடார் பங்கு வகிக்காத பிரிவே இல்லை. விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றிலும், மேலும் பல பிரிவுகளிலும் நமக்குத் தெரிந்த பணிகளுக்கும், தெரியாத பணிகளுக்கும் , ரேடார் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் முதன் முதலில் முன்னெச் சரிக்கைக்கு ரேடாரை பயன்படுத்தினார்கள். இது எதிரி விமானங்கள் வருவதை முன்கூட்டியே தெரிவித்துவிடும்.

எனவே அழையா விருந்தாளியாய் நமது எல்லைக்குள் வருபவர்களை நன்கு கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.

போர் விமானங்கள் பின்புறத்தில் இருந்து தாக்கப்படும் அபாயம் உள்ளது. வால்புறம் தாக்கப்படும் விமானம் தப்புவது கடினம். இதைத் தவிர்க்க  பின்புறக் கண்களாகப் பணிபுரியும் ரேடார்கள் வால் பக்கம் எச்சரிக்கை விடுக்கும். சுழன்று நோட்டமிடும் ரேடார்கள் இன்றைய குண்டுவீச்சு விமானங்களின் ஒரு பகுதி. இவை, தாக்கப்படும் நிலப்பரப்பு, அவற்றில் உள்ள பொருட்கள் இலக்கு ஆகியவற்றைப் படம் போட்டுக் காண்பிக்கும் வேவு ரேடார்கள், வழித்துணை ரேடார்கள் போன்றவையும் உள்ளன. மேலும் ஏவுகணைப் படையை முழுக்க முழுக்க இயக்குவது ரேடார் என்றும்
கூறிவிடலாம். 

தவிர, ஏவுகணை எதிர்ப்பு கூட்டமைப்பு ரேடார், நீண்ட தூர முன்னெச்சரிக்கை ரேடார், ரேடாரை ஏமாற்ற போலியான பொருள் வந்தால் உண்மையானதை கண்டுபிடித்துக் கூறும் ரேடார் என்று பலவிதமான ரேடார்கள் உள்ளன. கடற்படையிலும் ரேடார்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வானியலிலும், விண்வெளியியலிலும் ரேடார்களின் பங்கு அதிகம்.