சிறுவர் கதைகள்


                                              புறாவும்  - கட்டெறும்பும் 

                                        ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம். அப்படி ஒரு நாள் அந்த மரக்கிளையில் புறா அமர்ந்து அற்றில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தது.அப்போது ஆற்று நீரில் ஒரு கட்டெறும்பு சிக்கி தத்தளிப்பதைக் கண்டது.



         மறுநிமிடம் அந்தப் புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீது பரிதாபமும், இரக்கமும் பிறந்தது. மறுவினாடி அது ஏதோ சிந்தித்து விட்டு அரச மரத்தின் இலையில் ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.

      ஆற்று நீருடன் மெல்ல அடித்து வரப்பட்ட எறும்பு அந்த அரச இலையின் மீது பட்டதும் கப்பென அந்த இலையைப் பற்றிக் கொண்டது. இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீது ஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.

              கரையில் இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது. தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.

       ஒரு நாள் அந்த மரத்தடிக்கு ஒரு வேடன் வந்தான். அவன் மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறா கவனிக்கவே இல்லை.

            வேடன் தன் அம்பையும், வில்லையும் எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கி குறி வைத்தான். ஏதும் அறியாத புறா பேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்ற எறும்பிற்கு வேடன் தனது நண்பனான புறாவை குறி வைப்பது வெகு எளிதில் தெரிந்துவிட்டது.

       உடனே தன் நண்பனின் உயிரை காப்பது எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்தது. 



அடுத்த நிமிடம் அந்த வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின் குறி தவறியது. அவன் எய்த அம்பு எங்கோ போய் விழுந்தது. 

            இப்படி ஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும் கவனம் சிதறிய புறா வெடுக்கென திரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தை உணர்ந்தது. தன் நண்பனான எறும்பு தன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கி குறி வைக்கும் முன்பாக அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

               மறு நாள் தன் நண்பனான எறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும் ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றிய நன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.


நீதி : நாம் ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட 

          சமயத்தில் உதவ யாரேனும் வருவர்.