சிறுவர் கதைகள்



                                                                        பரிசுப் பொருள்


முன்னொரு காலத்தில் அகிலேந்திரா என்ற அரசர் சுந்தரபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு சாத்வி என்ற மனைவியும், சுபத்ரா என்ற மகளும் இருந்தனர். சில காலமாக அரசரையும், அரசியையும் பெரும் கவலை வாட்டியது. அதற்குக் காரணம் திருமண வயதை அடைந்துவிட்ட இளவரசி சுபத்ராவுக்கு பொருத்தமான கணவனை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதுதான். கடைசியாக, சுயம்வரம் நடத்தலாம் என்றும், அதற்கான அறிவிப்பை நாடு முழுவதும் அறிவிக்கலாம் என்றும் முடிவு செய்தனர். அறிவிப்பும் வெளியிடப் பட்டது.

சில நாட்களில் அழகும், வீரமும் கொண்ட மூன்று இளவரசர்கள் அரசர் அகிலேந்திரா அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவனின் பெயர் அஷ்வத். மற்றொருவனின் பெயர் அமோல். மூன்றாவது இளவரசனின் பெயர் அதீஷா.

அரசரும், அம்மூன்று இளவரசர் களையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். மூன்று இளவரசர்களும், ""மன்னா! நாங்கள் இளவரசி சுபத்ராவை திருமணம் செய்யும் எண்ணத்தில் வந்துள்ளோம்!'' என்று கூறினர்.

மூன்று இளைஞர்களையும் கண்ட அரசருக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால், இளைஞர்கள் மூவருமே அழகும், வீரமும், தீரமும் கொண்டிருந்தனர். அவர்களில் இளவரசிக்குப் பொருத்தமான கணவனைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று அரசர் யோசித்தார்.

பிறகு அரசர், மூன்று இளைஞர்களையும் நோக்கி, ""இளைஞர்களே! உங்கள் மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதாவது, உங்கள் மூவரில் யார் எனது மகளுக்கு மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொண்டு வந்து தருகிறீர்களோ, அவருக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்! இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் பரிசுப் பொருளைக் கொண்டு வந்து தர வேண்டும்!'' என்று உத்தரவிட்டார்.

இளைஞர்கள் மூவரும் அரசரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு, தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர்.

ஒரு மாதம் சென்றது.

மூன்று இளைஞர்களும் மன்னர் அகிலேந்திரா அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர்.

அரசர் மூவரையும் நோக்கி, ""என்ன இளைஞர்களே! என் மகளுக்கான மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

பிறகு இளவரசன் அஷ்வத்தை நோக்கி, ""இளவரசன் அஷ்வத்! நீ என்ன பரிசுப் பொருள் கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அஷ்வத் தன் பையிலிருந்து அழகான நீல வைரம் ஒன்றை வெளியில் எடுத்தான். அதை மன்னரின் கையில் கொடுத்துவிட்டு, ""மன்னா! நான் நாடு முழுவதும் தேடி இந்த விலைமதிப்பற்ற வைரத்தை தங்கள் மகளுக் காகக் கொண்டு வந்துள்ளேன்!'' என்று சொன்னான்.

அரசர் வைரத்தை வாங்கி, இளவரசியின் கையில் கொடுத்தார்.

பிறகு அமோலை அழைத்த அரசர், ""இளவரசன் அமோல்! நீ என்ன பரிசுப் பொருளைக் கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அமோல் தன் பையிலிருந்து அழகான வாள் ஒன்றை வெளியில் எடுத்து, அதை அரசர் கையில் கொடுத்தான்.

""மன்னா! நான் நாடு முழுவதும் அலைந்து திரிந்து சிறந்த போர்ப் பயிற்சியாளரிடம் பெற்று வந்த வாள் இது. இந்த வாளால் தாங்கள் தங்கள் பகை நாட்டு மன்னர்களை எளிதில் வெல்லலாம். உங்கள் நாட்டை விரிவுபடுத்திக் கொள்ளலாம்!'' என்று சொன்னான்.

அரசர், அமோல் கொடுத்த வாளைப் பெற்றுக் கொண்டார்.

இறுதியாக அரசரின் பார்வை இளவரசன் அதீஷா மீது விழுந்தது. அதீஷாவின் கையில் பரிசுப் பொருள் எதுவும் இல்லை. அவன் தலையைத் தாழ்த்தியபடி நின்றிருந்தான்.

""இளவரசன் அதீஷா! நீ என்ன பரிசுப் பொருள் கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார் அரசர்.

""மன்னா! என்னை மன்னித்து விடுங்கள்! என்னால் பரிசுப் பொருள் எதுவும் கொண்டு வர இயலவில்லை!'' என்று தயங்கித் தயங்கிப் பதில் கூறினான்.

அதீஷாவின் பதிலைக் கேட்ட அரசருக்கு வியப்பு தோன்றியது.

""என்ன பரிசுப்பொருள் எதுவும் கொண்டு வரவில்லையா? பிறகு எப்படி என் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கிறாய்?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

""மன்னா! நான் இளவரசி சுபத்ராவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக நான் மிகவும் பரபரப்பாக இருந்தேன். அதனால், என்னால் பரிசுப்பொருள் எதுவும் கொண்டுவர இயலவில்லை!'' என்று அடக்கமாகக் கூறினான் அதீஷா.

""மிகவும் பரபரப்பாக இருந்தாயா? அப்படி என்ன வேலை செய்து கொண்டிருந்தாய் அதீஷா?'' என்று கேட்டார் அரசர்.

""மன்னா! நான் பரிசுப்பொருளைத் தேடி என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போது வழியில் முதியவர் ஒருவர் காயமுற்றுக் கிடந்தார். அவருக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. எனவே நான் அவருக்கு மருந்திட்டு, அவர் குணமாகும் வரை அவருடன் இருந்து உதவிகள் புரிந்து வந்தேன்!'' என்றான்.

""சரி... அடுத்து என்ன நடந்தது?'' என்று கேட்டார் அரசர்.

""அதற்குப் பிறகு நான் பரிசுப் பொருளைத் தேடி என் பயணத்தைத் தொடர்ந்தேன். அப்போது ஓரிடத்தில் அப்பாவி மக்கள் பெருங்கூட்டமாக என் எதிரே ஓடி வந்தனர். அவர்களுடைய கிராமத்தைக் கொள்ளைக்காரர்கள் சூழ்ந்து கொண்டதாக என்னிடம் கூறினர். மேலும், கொள்ளைக்காரர்கள் அக்கிராம மக்களின் குடிசைகளைக் கொள்ளையடித்ததோடு, குடிசைகளுக்கு நெருப்பு வைத்து எரிப்பதாக என்னிடம் கூறினர்!''

""சரி... அதனைக் கேட்டு நீ என்ன செய்தாய்?'' அரசர் வியப்போடு கேட்டார்.

""மன்னா! நான் அந்தக் கிராம மக்களிடம் பேசினேன். சிறு கொள்ளைக் கூட்டத்திற்குப் பயந்து இவ்வாறு ஓடி ஒளிவது சரியல்ல... என்று கூறிய நான், அந்தக் கிராம மக்களை மீண்டும் அவர்களுடைய கிராமத்திற்கே வழிநடத்திச் சென்றேன். கிராம மக்களை ஒன்றிணைத்து, கொள்ளையர்களுடன் போராடி, கொள்ளையரை அங்கிருந்து விரட்டி அடித்தேன்.

''பிறகு சிறிது காலம் அக்கிராமத்திலேயே தங்கியிருந்து, சிதைந்து போன வீடுகளைச் செப்பனிட்டுக் கொடுத்தேன். காயமுற்றவர்களுக்கு மருந்திட்டு அவர்களைக் குணப்படுத்தினேன். கிராம மக்கள் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்பி வரும்வரை அவர்களுக்கு உதவி செய்தேன். இதற்குள் தாங்கள் எனக்கு அளித்திருந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்து விட்டது. அதனால்தான் என்னால் பரிசுப்பொருள் எதையும் கொண்டு வர இயலவில்லை!'' என்று கூறி முடித்தான் இளவரசன் அதீஷா.

இளவரசன் சொன்னதைக் கேட்ட அரசர் வியப்பில் ஆழ்ந்து போயிருந்தார். அரசர் மட்டுமின்றி அரசவையில் இருந்த அனை வருமே இளவரசன் அதீஷாவை நோக்கி மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர்.

அரசர், அதீஷாவிடம், ""அருமை! அருமை! இளவரசன் அதீஷா! நீ பரிசுப்பொருள் எதுவும் கொண்டு வரவில்லை என்று ஏன் நினைக்கிறாய்? எனக்குப் பிறகு இந்நாட்டை ஆட்சி செய்யும் முழுத்தகுதியும் உனக்கு இருக்கிறது.

""அரசன் என்றால் நாட்டு மக்களின் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். அத்தகைய அன்பு உன்னிடம் நிறையவே இருக்கிறது. நீ என் சுபத்ராவுக்காக அன்பு என்ற விலைமதிப்பற்ற பரிசைக் கொண்டு வந்திருக்கிறாய்! எனவே, என் மகளை உனக்குத் திருமணம் செய்து வைக்க எனக்கு முழுமையான சம்மதம் தான். என் மகளின் சம்மதத்தை மட்டுமே கேட்க வேண்டும்!'' என்று மகிழ்ச்சியோடு கூறியபடி, தன் மகள் சுபத்ராவை நோக்கித் திரும்பினார்.
இளவரசியும், இளவரசன் அதீஷாவை திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் தெரிவித்தாள்.

மறுநாளே, இளவரசி சுபத்ராவுக்கும், இளவரசன் அதீஷாவுக்கும் வெகு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?