சிறுவர் கதைகள்



                                                                                    நீர் சொல்வது சரி!



மந்தையூர் என்னும் நாட்டை சோமநாதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். சோமநாதன் மிகவும் நல்லவன். அவன் தன் நாட்டு மக்களைத் தன் குடும்பத்து உறுப்பினர்களைப் போல பார்த்துக் கொண்டும், பாதுகாத்தும் வந்தான். அம்மன்னனுக்கு முந்நூறு கிராமங்கள் சொந்தமாக இருந்தன. மன்னன் தனக்குச் சொந்தமான கிராமங்களில் வசிக்கும் மக்கள் எப்போதும் நியாயத்துக்குக் கட்டுப் பட்டு அமைதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு நீதி மன்றத்துக்கும் ஒரு நீதிபதியை நியமிக்கத் திட்டமிட்டான்.

நீதிபதியாக பதவி யேற்பவர்கள் நியாயத் துக்கும், நேர்மைக்கும், கட்டுப்பட்டு இருக்கக் கூடியவர்களாக  இருக்க வேண்டும் என்று எண்ணிய மன்னன் நீதிபதி களைத் தேர்ந்தெடுப் பதில், அதிக கவனமாக இருந்தான்.

மந்தையூர் நாட்டில் பவன் கொடி என்னும் ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வந்தனர். அக்கிராமத்தில் கருப்புசாமி என்ற சலவை தொழிலாளி வசித்து வந்தான். 

அவன் மனைவி முத்துலட்சுமி எப்போதும், "தன் கணவனை எதற்கும் உபயோகமில்லாதவன்' என்று திட்டிக் கொண்டே இருப்பாள். மந்தையூர் மன்னன் சோமநாதன், அவன் நாட்டில் இருந்த அத்தனை கிராமங்களிலும் ஒரு நீதிபதியை  நியமிக்கப் போவதை தண்டோரா மூலமாகத் தெரிந்துக் கொண்ட சலவை தொழிலாளியின் மனைவி  முத்து லட்சுமி தன் கணவனை எப்பாடு பட்டாவது, தன் கிராமத்துக்கு நீதிபதியாக்க முடிவு செய்தாள்.

மன்னன் தன் ஆட்சியின் கீழ் இருந்த கிராமங்களுக்கு நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் நியமிக்க, தனக்கு மிகவும் நெருக்கமாகவும், நம்பிக்கையாகவும் இருந்த ஒரு அதிகாரியை, ஒவ்வொரு கிராமமாகச் சென்று கிராமத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளும் ஒரு மனிதரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கும்படி கூறினார். 

அதிகாரி ஒவ்வொரு கிராமமாகச் சென்று நீதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பணியை தொடங்கினார்.

 சலவை தொழிலாளியின் மனைவி முத்துலட்சுமி தன் கணவனிடம் மன்னனால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கள் கிராமத்துக்கு வரும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரகசியமாகக் கூறினாள்.

மன்னன் கட்டளையைச் செயல்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரி, சலவைத் தொழிலாளியின் கிராமத்துக்கு வந்துள்ளதைத் தெரிந்துக் கொண்ட சலவைத் தொழிலாளி அடிக்கடி அதிகாரியின் கண்களில் படும்படி உலா வந்தான். அவன் அதிகாரியை நேருக்கு நேர் பார்க்கும் போது தான் போர்த்தி இருக்கும் மேல் துண்டை எடுத்து தன் சட்டையை அடிக்கடி துடைத்துக் கொள்வான். எதிரில் யாராவது வந்தால் உடனே அவன் அவர்கள் அருகில் செல்லாமல் சற்று தள்ளியே நடந்து செல்வான். அடிக்கடி இதுபோல் செய்வதைப் பார்த்தார் அதிகாரி.

ஒருநாள் சலவை தொழிலாளியை அழைத்த அதிகாரி, ""ஏன் சட்டையை அடிக்கடி துடைத்துக் கொண்டும், எதிரில் வருபவர்கள் அருகில் வரும்போது தள்ளியும் நடந்து செல்கிறீர்?'' என்று கேட்டார்.

""ஐயா, நான் எப்போதும் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன். நான் வீதியில் நடந்து செல்லும் போது வீதியில் உள்ள மண், காற்றின் வேகத்தால் என் சட்டை மீது படும். மண் எனக்கு சொந்தமில்லையே, இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர் மதிப்பிற்குரிய மன்னர்தான். அவருக்குச் சொந்தமான மண் என் சட்டையில் படுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதனால் தான் தெருவில் உள்ள மண் தூசி, என் சட்டையில் படும் போதெல்லாம் நான் அதை என் மேல் துண்டால் துடைத்துக் கொள்கிறேன்.

 நாம் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால் நமக்குச் சொந்தமான பொருளுக்கு அடுத்தவர்கள் ஆசைப்படுவர். ""தெருவில் நடந்து செல்லும் போது, என் எதிரில் வருபவர்களை நெருங்காமல் நடப்பது அவர்களுக்கு  சொந்தமான மூச்சுக் காற்று என் மீது படாமல் இருப்பதற்குத் தான்,'' என்றான் சலவை தொழிலாளி.

சலவைத் தொழிலாளி கூறியதைக் கேட்ட அரசாங்க அதிகாரி இந்தக் காலத்தில் இப்படி யும் ஒரு மனிதனா என்று ஆச்சரியப்பட்டார். அரண்மனைக்குத் திரும்பிய அதிகாரி உடனே சலவை தொழிலாளியை நீதிபதியாக நியமிக்கும்படி சிபாரிசு செய்தார்.

மன்னன் தன் அதிகாரி சிபாரிசு செய்த சலவை தொழிலாளியை, அவன் வசித்து வந்த கிராமத்துக்கு  நீதிபதியாக நியமித்தார். தன் கணவன் தங்கள் கிராமத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தெரிந்துக் கொண்ட சலவை தொழிலாளியின் மனைவி முத்துலட்சுமி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்.

அவள் தன் கணவனிடம், தாங்கள் நீதிபதியாக உள்ள நீதிமன்றத்துக்கு வருவதாகக் கூறினாள்.

சலவை தொழிலாளியும் தன் மனைவியை, தான் நீதிபதியாக உள்ள நீதிமன்றத்துக்கு எப்போது வேண்டுமானாலும் வரச் சொன்னான்.

ஒருநாள் சலவை தொழிலாளியின் மனைவி முத்துலட்சுமி தன் கணவன் நீதிபதியாக இருக்கும்  நீதிமன்றத்துக்கு சென்றாள். அங்கே ஒரு வழக்கு நடந்துக் கொண்டிருந்தது. 

தன் கணவன் சலவைத் தொழிலாளி நீதிமன்றத்தில் நீதிபதி இருக்கையில் அமர்ந்து வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.சலவைத் தொழிலாளி நீதிபதி இருக்கையில் அமர்ந்து கொண்டு வாதி கூறும் நியாயத்தைக் கேட்டு வாதியைப் பார்த்து, ""ஐயா நீங்கள் கூறுவது சரி,'' என்று கூறினான். 

பிறகு பிரதிவாதி கூறும் நியாயத்தைக் கேட்டு,""ஐயா நீங்கள் கூறுவதும் சரி,'' என்றான்.

தன் கணவன் வாதி, பிரதிவாதி இருவர் கூறுவதும் சரி என்று கூறுவதைக் கேட்டு, ""கனம் நீதிபதி 

அவர்களே! நீங்கள் வாதி, பிரதிவாதி இருவர் கூறுவதும் சரியென்று கூறினால் நீங்கள் குற்றவாளியை  எப்படி கண்டு பிடிப்பீர்கள்?'' என்று கேட்டாள்.

சலவைத் தொழிலாளியும் சற்றும் தாமதிக்காமல் தன் மனைவியைப் பார்த்து, ""பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருக்கும் நீங்கள் கூறுவதும் சரி,'' என்று பலமாக தலையாட்டினான்.

நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த சலவைத் தொழிலாளி கூறியதைக் கேட்டு நீதிமன்றத்தில் கூடி இருந்த அனைவரும் சிரித்தனர்.

அதன்பிறகுதான் தெரிந்தது அவனுக்கு ஒன்றுமே தெரியாது என்பது. மனைவியின் வற்புறுத்தலால் இந்தப்பதவி கிடைத்தது என்பதை அறிந்து இருவரையும் சிறையில் அடைத்து விட்டு, தகுதியான ஒருவனைதேர்ந்தெடுத்தனர்.

தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதால் இப்படி சிறையில் வாட நேரிட்டதை எண்ணி இருவரும் நொந்து போயினர்.