இலட்சுமி கடாட்சம்:
முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன.
ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, “”அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.
“”நான் தான் மகாலட்சுமி; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். பிரம்மன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,” என்றாள்.
மகாலட்சுமி போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.“”அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,” என்றார்.
லட்சுமியும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது லட்சுமியின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.
வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை தூக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “”அடி! உதை அவனை பிடி!” என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர்.உடனே அரசன், “”முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் முக்காலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,” என்றான்.
கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; லட்சுமிதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.
அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு லட்சுமி கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் லட்சுமி இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் தூங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.
கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது.
“”முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!” என்றான்.இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர்.ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர்.மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார்.
அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை தூக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது தூக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது.
கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது லட்சுமி, “”நான் தங்கøள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.
கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், “”இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,” என்று கோபப்பட்டான். முனிவரோ, “”மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துõக்கிப் பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். லட்சுமி கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,” என்றார்.
மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், “”எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். லட்சுமி என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,” என்றார்.
மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு லட்சுமி போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.
மெய்ப் பொருள் நாயனார்:
சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்கள் எப்பொழுதும் சிவனையே நினைத்துக்கொண்டு இருப்பார்கள் .அதே மாதிரி ஒரு அரசன் ஒருவர் , திருக்கோவிலூர் என்ற நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தார் .
அவர் பெயர் மெய்ப்பொருள் நாயனார்.
அவர வேற எந்தநாட்டு அரசனாலும் தோற்கடிக்க முடியவில்லை . காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களும். அது மட்டுமில்லாமல், எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்தார் . அதனால் எல்லாரும் அவரை கடவுளைப் போல பார்த்தார்கள்.இதைப்பார்த்த மற்ற நாட்டு அரசருக்கெல்லாம் பொறாமையாய் இருந்தது, இவர எப்படியாவது தோற்கடித்து , அவரோட நாட்டை பிடிக்கணும்னு பல தடவை முயற்சி செய்து தோல்வி கண்டனர்.
விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..இதைத் தெரிந்து கொண்ட எதிரி நாட்டுஅரசன் ஒருவன் , ஒற்றன் ஒருவனை திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவைத்தான். அவன் பேரு முத்தநாதன்.அவனும் வேடமிட்டு நாட்டுக்குள் நுழைந்தான் . நேராக அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் கண்ட காவலர்கள் உள்ளே விட்டனர் .மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.
சிவனடியார் வேடத்தில் இருந்த முத்தநாதன், மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.
இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.
தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேடத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.
இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை கவனமாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.
மன்னரை சிவனடியார் வேடத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர். தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.
கன்னிமார்களின் கதை :
பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கைகூடவில்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உணராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்கள்.
சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளையாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.
இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, “”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.
அதற்கு காத்தாயி, “”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அழுதபடி கேட்டாள்.
“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.
அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், “”இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக- காவலர்களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.

|