சிறுவர் கதைகள்

சட்டைக்குள் முல்லா 

ஒருநாள் முல்லா தம்முடைய உயரமான வீட்டுசுவரின் மீது, ஓர் ஏணியை சாய்த்து வைத்து அதன் உச்சியில் ஏறி நின்று கொண்டு சுவருக்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தார்.தற்செயலாக ஏணியிலிருந்த அவரது கால் வழுக்கிக்கொள்ளவே முல்லா ஏணியின் உச்சியிலிருந்து ''தடால்'' என்று கீழே விழுந்தார். அவர் விழுந்த சத்தத்தைக் கேட்டு அவருடைய மனைவி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,''என்ன சத்தம்? என்று திகைப்போடு கேட்டார்.கீழே விழுந்து அப்போது தான் எழுந்துகொண்டிருந்த முல்லா,தமது மனைவியை நோக்கி,ஒன்றுமில்லை ஏணியின் உச்சியில் இருந்து கொண்டு சுண்ணாம்பு அடித்தபோது ,என்னுடைய சட்டை கீழே தவறி விழுந்து விட்டது'' என்றார். அதற்கு அவர் மனைவி, சட்டை விழுந்ததினாலா இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது '' என்றார். அதற்கு ''சட்டை விழுந்தது உண்மைதான் ஆனால் ,துரதிருஷ்டவசமாக சட்டைக்குள் என்னுடைய உடல் இருந்து விட்டது ''என்றார் முல்லா.


முன் யோசனை முல்லா


ஒரு நாள் முல்லா அதிக விலை கொடுத்து ஒரு மண்பானை வாங்கி வந்தார்.அந்தப் பானையை ஒரு நாள் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவனிடம் கொடுத்து அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருமாறு கூறினார்.அந்தச் சிறுவன் பானையை வாங்கிக்கொண்டு கிளம்பியபோது முல்லா அவனை நோக்கி,''பானையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ''பானையை நீ உடைத்துவிட்டால் உனக்கு சரியான அடி கிடைக்கும்'' என்றார்.


 அப்போது மண் பானையை எடுத்துக்கொண்டு சென்ற சிறுவனை முல்லா திரும்ப அழைத்தார்.அவர் அருகே பையன் வந்ததும்,பையனுடைய முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார்.திகைத்துப்போனசிறுவன் முதுகைத் தடவிக்கொண்டே,''பானையை உடைத்தால் தானே அடி கொடுப்பதாகச் சொன்னீர்கள்,இப்போது ஏன் அடித்த்தீர்கள்? எனக் கேட்க,அதற்க்கு முல்லா ''சிறுவனே நீ பானையை உடைத்த பிறகு உனக்கு அடிகொடுத்து என்ன பயன்? உடைந்து போன பானை திரும்ப வருமா? அதனால்தான் முன்னதாகவே அடி கொடுத்தேன்" என்றார். 

முல்லா கொடுத்த கோழி விருந்து 

         முல்லாவுக்கு வேண்டிய கிராமத்து விவசாயி ஒருவர், ஒரு நாள் முல்லாவை பார்க்க வந்திருந்தார். அப்போது  அவர் ஒரு பெரிய கோழியை  பரிசாகக்  கொடுத்து விட்டுச் சொன்னார்: ''கிராமத்திலிருந்து எனது நண்பர்கள் பலர் வருவார்கள். அவர்களை உபசரித்து  வைத்தால் போதுமானது' என்றார். பின் முல்லாவும் அவருடைய மனைவியும் அந்தக் கோழியை சுவையாக சமைத்து உண்டு மகிழ்ந்தார்கள்.

           

        சில நாட்கள் கழித்து, முல்லாவின் வீட்டுக்கு வந்த ஒருவர், முன்பு கோழி பரிசளித்தவருடைய நெருங்கிய நண்பர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  ''அப்படியா மிக்க மகிழ்ச்சி " என்று வரவேற்ற முல்லா வந்தவருக்கு நல்ல உணவளித்து உபசாரம் செய்து அனுப்பி வைத்தார். இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு மனிதர் முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அவரும், ''நான் கோழி பரிசளித்தவரின் நண்பனுக்கு நண்பன்''என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவரையும் உபசரித்து அனுப்பி வைத்தார் முல்லா.         

 

     இதன்பின் இரண்டு,மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றொருவர் வந்து ''கோழி பரிசளித்தவரின் நண்பனுக்கு,நண்பனுக்கு ,நண்பன் ''என்று கூறிக்கொண்டு வந்தார்.இவ்வாறு ஒருவர்பின் ஒருவராக ஆட்கள் வருவதைக்கண்டு, இதற்கு ஒரு நல்ல முடிவு  கட்ட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார் முல்லா. 


                  பின்பு முல்லா வந்தவரை பிரமாதமாக வரவேற்று அமரச் செய்து,தயவுசெய்து கொஞ்ச நேரம் காத்திருங்கள்.அருமையான கோழி சூப் தயாராகிக் கொண்டிருக்கிறது. ருசித்து சாப்பிட்டு விட்டுச் செல்லலாம்''என்று  கூறிவிட்டு முல்லா சமையலறை  நோக்கிச் சென்றார். அங்கு தமது மனைவியிடம் ஏதோ சொல்லிவிட்டுத் திரும்பினார்.


           சற்று நேரத்திற்குப் பிறகு முல்லாவின் மனைவி ஒரு கோப்பையைக் கொண்டுவந்து ''சூப் தயாராகிவிட்டது,சாப்பிடுங்கள் '' என்று புதிதாக வந்தவரின்  முன் மேசையின் மீது வைத்து விட்டுச்  சென்றாள். முல்லா அந்த புதிதாக வந்தவரிடம் ''சூப் சூடாக இருக்கிறது பார்த்துச்  சாப்பிடுங்கள் '' என்று கூறினார். 


                  விருந்தாளி நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு ஆவலோடு சூப்பை எடுத்துக் குடிக்க முற்பட்டார். அடுத்த கணமே அவருடைய முகம் மாறுதலடைந்தது. ''என்ன முல்லா அவர்களே, இது சூப்பாக இல்லையே, வெறும் சுடு நீராக இருக்கிறதே? என்று ஏமாற்றத்தோடு கேட்க அதற்கு முல்லா,'


          'நண்பர் அவர்களே உங்களுடைய நண்பருக்கு, நண்பருக்கு, நண்பரான அன்பர் கொடுத்த கோழியிலிருந்து தான் இந்த சூப் தயாரிக்கப்பட்டது. கோழி பரிசளித்தவரின் நண்பர்கள் இங்கே வரும்போதெல்லாம், அவர் கொடுத்த கோழியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப்பைத்  தான் கொடுக்கிறேன். இன்று நீங்கள் அருந்திய  சூப்பும் கூட, அந்த கோழியிலிருந்து தயாரிக்கப்பட்ட சூப்பினுடைய,சூப்பினுடைய ,சூப்பினுடைய ,சூப்பாகும்.அதனால் தான் இந்த சூப் சுடுநீர் போலிருக்கிறது'' என்றார், வந்த விருந்தாளியோ,மெல்லவும் முடியாமல்,முழுங்கவும் முடியாமல் அந்த சூப்பைக் குடித்து விட்டு, சொல்லாமல்,கொள்ளாமல் போய்விட்டார். அதற்குப் பிறகு முல்லாவின் வீட்டுப் பக்கம் யாருமே வரவில்லை.


பீரோவுக்குள் ஒளிந்த முல்லா
       

           ஒரு நாள் நள்ளிரவில் முல்லா மட்டும் தனியாகத்  தமது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்,வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதாவது இருக்கிறதா,என தேட ஆரம்பித்தார்கள்.அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட முல்லா,வீட்டுக்குள் திருடர்கள் தேடுவதைக் கண்டு, மெதுவாக எழுந்து சப்தம் செய்யாமல் பீரோவுக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டார். 


         பல இடங்களில் தேடியும் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் கிடைக்காத திருடர்கள், பீரோவைத் திறக்க அதில் முல்லா ஒளிந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.முல்லாவிடம் ஏதோ விலை உயர்ந்த பொருள் இருப்பதனால் தான் அவர் இவ்வாறு மறைந்து இருக்கிறார் என நினைத்த திருடர்கள்,முல்லாவிடம் ''எதற்காக பீரோவுக்குள் ஒளிந்து இருக்கிறீர்கள்? எனக் கேட்க,அதற்க்கு முல்லா, ''உங்களைப் போன்ற திருடர்கள் மிகவும் சிரமப்பட்டு என் வீட்டுக்குள் வந்திருக்கும் போது, நீங்கள் எடுத்து போகும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்னிடம் ஏதும்  இல்லாமல் போய்விட்டதே என வெட்கப்பட்டுத்தான் இங்கு ஒளிந்திருக்கிறேன் ''என்றார். இதைக் கேட்ட திருடர்கள் தாங்கள் வந்த வேலையையும் மறந்து வயிறு வலிக்க சிரித்து விட்டுச் சென்றார்கள்.

   

முல்லா கேட்ட கேள்வி

           ஒரு சமயம் முல்லா ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார்.வழியில் ஓரிடத்தில் யாரோ ஒருவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச்  சூழ்ந்து மக்கள் திரளாகக் கூடி அவர், கூறுவனவற்றை செவி மடுத்த வண்ணம் இருந்தனர்.''யார் அவர் இங்கே என்னே பேசுகிறார்? ''என்று கூட்டத்திலிருந்த ஒருவரை முல்லா விசாரித்தார். அதற்கு'' இவர் பெரிய   மகான். மக்களின் வினாக்களுக்கு இவர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்'' என்றார். இதைக் கேட்ட முல்லா ஓரிடத்தில் அமர்ந்து அந்த மகான் பேசிய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டார். 

                   அந்த மகான் ஓரளவுக்கு விஷய ஞானம் தெரிந்த மேதையாக இருந்தாலும், தனக்கு தெரியாதது உலகத்தில் எதுவுமே இல்லை என்பது போன்ற ஆணவம் அவர் பேச்சிலே பிரதிபலிப்பதை முல்லா கவனித்தார். பேச்சின் முடிவாக அந்த மகான், '' உலகத்தில் என்னைவிட அறிவாளியே கிடையாது.   எவ்வளவு   சிக்கலான  கேள்வியாக   இருந்தாலும்  என்னுடைய  அறிவாற்றலால்  எந்தக் கேள்விக்கும்   எளிதாக என்னால் பதில்  சொல்லிவிட முடியும்''  என்று கர்வத்தோடு  சொன்னார். 

          

        இதைக்  கேட்டுக்கொண்டிருந்த  முல்லா, அந்த மகான் முன் நின்றார்.  ''என்ன சமாச்சாரம்?  ஏதாவது  கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?'' என்று அந்த மகான் கேட்டார். ''ஆமாம், நான்  ஒரு சந்தேகக் கேள்வியைக் கேட்க  விரும்புகிறேன்'' என்றார் முல்லா. இதைக் கேட்ட மகான் அட்டகாசமாக சிரித்துக்கொண்டு, என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளும். உடனே பதிலளிக்கிறேன்''  என இறுமாப்புடன் கூறினார். 


               உடனே முல்லா ''ஓர் இரவில் கதவு மூடியிருக்கும் ஒரு வீட்டிற்க்குள் இருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளை திருடுவதற்கு வழி என்ன ?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்ட மகான்,ஆச்சரியமும், திகைப்பும் அடைந்து, ''உமக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? ஒரு திருடனிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறாயே ''என்று    கடுஞ்சினத்துடன் முல்லாவின் மீது சீறி விழுந்தார் அந்த மகான்.

 

         ''ஒரு திருடனிடம் கேட்க வேண்டிய கேள்வியை,உங்களிடம் கேட்கக் கூடாது என்று தாங்கள் முன்னதாகச் சொல்லவில்லையே. என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதாகத்தானே அறிவித்தீர்கள். அந்த வகையில் தான் , நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டேன். இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா, முடியாதா? அதை முதலில் கூறுங்கள்'' என முல்லா குரல் எழுப்ப,முல்லாவின் கேள்வி தனது அகங்காரத்திற்கே கிடைத்த அடியென உணர்ந்த அந்த மகான், தனது தவறை உணர்ந்து அந்த ஊரை விட்டே சென்றார்.


முல்லாவின் கை  விளக்கு                                                                                                            

          முல்லா சாதாரணமாக மக்களிடம்  பேசிக்கொண்டிருக்கும்போது தன்னுடைய கண்பார்வையைப் பற்றி   பெருமையாகப் பேசுவது வழக்கம். ''எவ்வளவு கடுமையான இருளிலும்   விளக்கின் உதவியில்லாமல் என்னால் எந்த நுண்ணிய   பொருளையும் பார்க்கமுடியும்''  என்று முல்லா அடிக்கடி கூறிக் கொள்வார்.  


    ஒருநாள்   முல்லா   நல்ல இருட்டு   நேரத்தில் கையில் ஒரு விளக்குடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் அவரிடம்,  ''முல்லா அவர்களே விளக்கில்லாமலே இருளில் எதையும்   பார்ப்பேன் என்று கூறுவீர்களே,  இப்போது  விளக்கோடு நடமாடிக்  கொண்டிருக்கிறீர்களே'' என்று  கேட்டான். 


       அதற்கு முல்லா,  ''இளைஞனே ! என்னுடைய சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசமே இருக்காது ! விளக்கின் உதவியில்லாமலே இருட்டில் நன்றாக என்னால் பார்க்கமுடியும். ஆனால், உங்களால் இருட்டில் என்னைப்பார்க்கப் முடியாது  அல்லவா ! ஆகவே நான் வருவது தெரியாமல் என் மீது நீங்கள் மோதிவிடாமல் இருக்கவே நான் கையில் விளக்கேந்தி வருகிறேன்'' என்றார்


 முல்லா  கொண்டு சென்ற கோழிக்குஞ்சு         

        முல்லா வசித்து வந்த நாட்டின் பக்கத்துக்கு நாட்டிற்கு யாரும் கோழி முட்டைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று  சட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். இதனால் அந்த நாட்டில் கோழி முட்டைகளுக்கு நாள் விலை கிடைத்து வந்தது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு முல்லா, அந்த நாட்டின் காவலர்களுக்குத் தெரியாமல்,கோழிமுட்டைகளை எடுத்துச் சென்று, விற்பனை செய்து, நல்ல லாபம் அடைந்து வந்தார்

            

              ஒரு நாள் பக்கத்து நாட்டிற்கு கோழிமுட்டைகளை முல்லா எடுத்து சென்ற போது, அந்த நாட்டு காவலர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள்.உடனே முல்லாவை அழைத்து,''கூடைக்குள் என்ன இருக்கிறது? எனக் கேட்க, ''கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன'' என முல்லா பதிலளிக்க, அதற்கு அந்த காவலர்கள்,''எங்கள் நாட்டில் கோழி முட்டைகளைத் தான்  எடுத்து வரக்கூடாது.கோழிக் குஞ்சுகளை எடுத்து வருவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றாலும்,இன்னும் சிறிது நேரத்தில் பெரிய அதிகாரி வந்து விடுவார், அவர் அனுமதி பெற்று நீங்கள் இந்தக் கோழி குஞ்சுகளை எங்கள் நாட்டிற்குள் எடுத்துச் செல்லலாம் ''என்றனர். 


         சற்று நேரத்தில் பெரிய அதிகாரி அங்கு வந்து சேர்ந்தார்.காவலர்கள் அவரை நோக்கி, ''இந்த பெரிய மனிதர் கோழிக்குஞ்சுகளை நமது நாட்டிற்குள் கொண்டு செல்ல விரும்புகிறார்.முட்டைகளைத்தானே நமது நாட்டிற்குள் எடுத்துச் செல்லக்கூடாது. கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வதில் தடையேதும் இல்லை அல்லவா ? என்றாலும் தங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என்பதற்காகத்தான் இவரை இருக்கச் சொன்னோம்'' என்றார்கள். உடனே அதிகாரி, ''கோழிக்குஞ்சுகளை எடுத்துப் போவது சட்டப்படி  என்றாலும், கூடைக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டியது எங்களுடைய கடமை. அதனால்   உங்கள் கூடையைத் திறந்து காண்பியுங்கள் பார்க்கலாம்''  என்றார். 

   உடனே முல்லா கூடையைத் திறந்து காண்பித்தார்.கூடைக்குள் கோழிக்குஞ்சுகளுக்குப் பதிலாக கோழி முட்டைகள் இருப்பதைக்கண்டு  அதிகாரியும், காவலர்களும் திடுக்கிட்டார்கள். ''இவ்வளவு  பெரிய மனிதரான   நீங்கள் கோழி முட்டைகளைக்  கூடையில் வைத்துக் கொண்டு, கோழிக்குஞ்சுகள்  இருப்பதாகப் பொய்   சொல்லிவிட்டீர்களே'' என்று அந்த அதிகாரி கோபத்தோடு கேட்டார். 
அதற்கு முல்லா, ''அதிகாரி அவர்களே, நான் சொல்வதைச் சற்றுப் பொறுமையுடன்  கேட்பீர்களானால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்று உங்களுக்குத்  தெரியவரும். கோழிக்குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன?'' எனக் கேட்க  அதற்கு அந்த அதிகாரி, ''கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வருகிறது'' என பதிலளித்தார். உடனே முல்லா, ''அப்படியென்றால்  கோழிமுட்டைக்குள் குஞ்சு அடங்கியிருக்கிறது என்று தானே அர்த்தம்'' என்றார்.