சிறுவர் கதைகள்

                                                           
                                                               குணம் மாறாத செல்வந்தன்



முன்னொரு காலத்தில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அளவு கடந்த செல்வம் இருந்தும் ஒருவருக்கும் ஒரு பொருளையும் கொடுக்க மாட்டான். யாராவது வறியவர் அவனை நாடி வந்தால், ""யாரிடமும் எதையும் கேட்கக்கூடாது, யாருக்கும் எதையும் கொடுக்கக்கூடாது என்று நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். சும்மா என்னை தொந்திரவு செய்யாதே! போ...போ...'' என்று விரட்டி விடுவான்.

தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களை மிகக் கடுமையாக வேலை வாங்கிவிட்டு, மிகக் குறைந்த ஊதியத்தையே அவர்களுக்கு வழங்குவான். இப்படி ஒரு விதத்திலும் எந்த நற்செயலும் புரியாமல் சுயநலத்துடன் வாழ்ந்தான்.காலங்கள் உருண்டோடின. செல்வந்தன் கிழப்பருவமெய்தி மரணமடைந்தான். 

அன்பில்லாத அவனை அடக்கம் செய்த இடத்தில் ஒரு புல் பூண்டுகூட முளைக்கவில்லை. அவன் செய்த தீய செயல்களின் பயனாக அவன் நரகத்தில் உழல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நரகத்திலும் "பாழ் நரகக் குழி' என்ற இடத்தில் மிகமிகப் பாவம் செய்த ஆத்மாக்களுடன் கிடக்க நேர்ந்தது. அதன் கொடுமை தாங்காமல் ""இறைவா, என்னை மன்னித்துவிடு!'' என்று கண்ணீர் விட்டு மன்றாடினான்.


இதைக்கண்ட தர்மதேவதை, அவன் மேல் இரக்கப்பட்டு, அவனை அக்குழியிலிருந்து மேலே கொண்டுவர எண்ணியது. அவன் வாழ்நாளில் ஏதாவது ஒரு நற்செயலையாவது செய்திருப்பானா? என நினைத்தது. ஆம்! அவனும் தன்னையும் அறியாமல் ஒரே ஒரு நற்செயல் செய்திருந்தான்!
அது என்னவென்றால் அவன் ஒரு சமயம் நடந்து செல்லும்பொழுது வழியில் ஒரு சிறு சிலந்திப் பூச்சியைத் தரையில் கண்டான். அதை மிதிக்காமல் தன் காலை எட்டி வைத்து நடந்தான். 

அவனை அறியாமல் செய்த அந்த நற்செயலின் பலனை அவனுக்கு வழங்க தர்மதேவதை முடிவு செய்தது. தர்மதேவதையின் கையில் உடனே ஒரு சிலந்தி தோன்றியது. அது தன் வாயிலிருந்து நூல் போன்ற பொருளை உமிழ்ந்து அந்த நரகக் குழிக்குள் செலுத்தியது.

தர்மதேவதை அந்தக் கொடியவனை அழைத்து, ""இந்த நூலைப்பிடித்து, நீ மேலேறி வந்தால், இந்தக் குழியிலிருந்து வெளியேறிவிடலாம்!'' என்றது. 

""இந்தச் சிலந்தியின் நூல் எப்படி என் எடையைத் தாங்கும்?'' என்று கேட்டான் அவன்.

""முயற்சி செய்துதான் பாரேன்!'' என்றது தர்மதேவதை. 

அதன்படியே அவன் முயற்சி செய்ய... என்ன அதிசயம்! அவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வந்து கொண்டிருந்தான். இப்படி அவன் பாதி தொலைவு ஏறி வந்து கொண்டிருக்கும்பொழுது தன் காலுக்கடியில் மேலும் சிலரும் அந்த சிலந்தியின் நூலைப் பிடித்துக்கொண்டு ஏறி வருவதைக் கண்டான். அவனுக்கு உடனே கோபம் தலைக்கேறியது.

""அடேய்! பாவிகளா! இது நான் மட்டுமே ஏற வேண்டிய நூல்! நீங்கள் ஒருவரும் ஏறக்கூடாது!''

என்று கூறியபடியே பொறாமையாலும் சுயநலத்தாலும் தன் காலுக்குக் கீழே தொங்கிய அந்தச் சிலந்தி நூலை அறுத்து எறிந்தான். அதைப் பிடித்து ஏறத்தொடங்கியோர் அனைவரும் மீண்டும் பாதாளத்தில் வீழ்ந்தனர்.

அந்தோ பரிதாபம்! நரகத்திலும் மனம் திருந்தாத அவன் துர்குணத்தால் அவன் பிடித்திருந்த நூல் முழுவதுமாக அறுந்து அவன் மீண்டும் அந்தக் குழிக்குள்ளேயே வீழ்ந்தான்!

தர்மதேவதை உடனே மறைந்து போனது! சிலந்தியும்தான்!