சிறுவர் கதைகள்


                                                                                                                புலி ராஜா 

குறிஞ்சாங்காட்டு சிங்கராஜா குண்டப்பனின் மந்திரி புல்லன் புலிக்கு, “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மந்திரியாகவே இருப்பது?’ எனும் எண்ணத்தில் திடீரென ராஜாவாகும் ஆசை வந்துவிட்டது. குண்டப்பனுக்கு எதிராக காட்டு மிருகங்கள் அனைத்தும் ஏற்றும் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை வைக்க அது தீவிரமாக யோசித்தது.
பார்க்கும் கண்கள் பிரமிக்கும் வகையில் பரந்து விரிந்து கிடந்த பெரிய குறிஞ்சாங்காட்டுக்கு மந்திரி என்று பெயர்தானே ஒழியே, மட்டி மடையனாக இருந்தது அந்தப் புல்லன் புலி. இரண்டு நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டும் சிங்கத்திற்கு எதிராக சொல்லக் குற்றம் எதையும் கண்டுபிடிக்காத புல்லன், மூன்றாவது நாள் குறுக்கன் நரியிடம் போய் ஆலோசனைக் கேட்டது.
”குண்டப்பனுக்கு எதிரா பொருத்தமா குற்றம் சொல்லி உங்களை ராஜாவா ஆக்கறதால எனக்கு என்ன பிரயோஜனம்?” என்று புல்லனிடம் காரியார்த்தமாக கேள்வியை வைத்தது குறுக்கன் நரி.
”குண்டப்பனுக்கு மாற்றா குறிஞ்சாங்காட்டுக்கு நான் ராஜாவானால் நீதான் மந்திரி. இதுல கொஞ்சமும் சந்தேகம் தேவையில்லை” என்று புல்லன் அதிரடியாக குறுக்கனைக் குஷிப்படுத்திற்று.
“எதிர்கால மந்திரி’ எனும் கற்பனையில் நரியின் குறுக்குப்புத்தி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. ஒருசில நிமிட இடைவெளியில் குறுக்கன், புல்லனிடம் தனது யோசனையை விவரமாக தெரிவித்தது.
”கொஞ்ச நாளாவே ராத்திரில ராஜா குண்டப்பனோட குறட்டைச் சத்தம் காட்டையே அதிர வைக்குது. இந்தக் கோரமான குறட்டைச் சத்தம் காட்டு மிருகங்கள நிம்மதியா தூங்க விடாம தடுக்குது. காட்டுக்கே காவலா இருக்க வேண்டிய ராஜா இப்படி நிம்மதியா குறட்டை விட்டு தூங்குற நேரத்துல பக்கத்துக் காட்டு மிருகங்க, நம்ம மேல படையெடுத்து வந்தா நம்ம கதி என்னாவறது? அதனால், குண்டப்பன் ராஜாவா நீடிக்கக் கூடாது. உடனடியா குண்டப்பனுக்கு பதிலா ரொம்ப காலமா நமக்கு நல்ல மந்திரியா இருக்கும் புல்லன் புலிய ராஜாவாக்கணும்’னு நீதிமன்றத்துல சொல்லணும். எப்படி என் யோசனை?”
”நல்ல யோசனைதான். ஆனால், குறட்டைச் சத்தத்தை ஒரு குறையா சொன்னா காட்டு மிருகங்க ஏத்துக்குமான்னு எனக்குள்ள சின்னதா ஒரு சந்தேகம்.”
”சந்தேகம் தேவையில்லை. குண்டப்பன் மீது புகார் சொல்ற விவகாரத்த நான் பார்த்துக்கறேன். காட்டுக்கு ராஜாவாகணும்னா இனிமே நீங்க நான் சொல்றபடி சரியா நடந்துக்கணும். என்ன சரியா?”
”சரி சரி! உன் பேச்சுப் படி ரொம்ப சரியா நடந்துக்கறேன்” என்று தலையாட்டியது புல்லன்.
புல்லனும், குறுக்கனும் பேச்சு சுவாரஸ்யத்தில் நாவல் மரத்தில் உட்கார்ந்திருந்த கரடி கண்ணப்பனைக் கவனிக்கத் தவறிவிட்டன.
அவர்களது பேச்சை தற்செயலாக கேட்டறிந்த கண்ணப்பன், ”காட்டுக்குள் புதிதாக உருவாகியிருக்கும் இரண்டு சதிகாரர்களுக்கு எதிராக என்ன செய்யலாம்?” என்று யோசனையில் மூழ்கியது.
வழக்கு சிங்கத்திற்கு எதிராக எனும் காரணத்தினால் சிங்கம் இனம் ஒன்றைத் தவிர யானை, புலி, கரடி, சிவிங்கி, குரங்கு, மான், முயல் என இப்படி வகைக்கொருவராக வயது முதிர்ந்த நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தில் குறுக்கன், குண்டப்பனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியது. கூடவே ”ஆயிரக்கணக்கான நமது காட்டு மிருகங்களிடையே குறட்டையே விடாத ஒருவர் எனும் தகுதியில் அடுத்த ராஜாவாக புல்லன் இருக்கலாம் என்பது எளியவன் எனது தாழ்மையான கருத்து” என்று பக்குவமாக புல்லனைப் பரிந்துரை செய்தது.
குண்டப்பனுக்கு எதிராக குறுக்கன் வைத்த குற்றச்சாட்டை கவனமுடன் கேட்ட நீதிபதிகளின் எதிரில் கரடி கண்ணப்பன், குறுக்கனுக்கு எதிராக திடீரென்று ஆஜராகியது கூடியிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்திற்று.
”சாதாரண குறட்டைச் சத்தத்தை குண்டப்பனுக்கு எதிராக குற்றமா வைக்கறதுல ஏதோ உள்நோக்கம் இருக்கறதா நான் நினைக்கிறேன். மேலும், குண்டப்பனின் குறட்டைச் சத்தத்தால நம்ம காட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இன்னைக்கு வரைக்கும் ராஜா குண்டப்பனின் தைரியம், துணிச்சல், பலத்துக்கு நிகரா காட்டுக்குள்ள யாரும் இல்லன்றது அனைவருக்கும் நல்லா தெரியும். குண்டப்பனின் குறட்டையை குற்றம் என நீதிமன்றம் கருதுவதா இருந்தா காட்டிலிருக்கும் எல்லா மிருகங்களின் குறட்டையையும் நீதிபதிகள் ஆய்வு செய்யணும்னு பணிவா கேட்டுக்கறேன்.”
குறுக்கன், கண்ணப்பன் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், ”இன்றிரவு குறிஞ்சாங்காட்டில் நாங்கள் குறட்டையை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகு தீர்ப்புக் கூறுவோம்” என்று அறிவித்தனர்.
குண்டப்பனுக்கு எதிரான வழக்குக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒன்றுமறியாத அப்பாவியாக நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த புல்லன், குறுக்கனை ரகசியமாக அதன் குடிசையில் சென்று சந்தித்து கவலையோடு சில கேள்விகளை கேட்டது.
”என்ன குறுக்கா இப்படி செய்துட்டே? குறிஞ்சாங்காட்டுக்குள்ள குறட்டையே விடாதவர் புல்லன் ஒருத்தர்தான்னு சொல்லிட்டியே! இருட்ட ஆரம்பிக்கறதுலேர்ந்து பொழுது விடியற வரைக்கும் நான் நல்லா தூங்கிப் பழக்கப்பட்டவன். கூடவே குண்டப்பன் அளவுக்கு இல்லாட்டியும் நானும் குறட்டை விடறவன். ராத்திரி நீதிபதிகள் ஆய்வுக்கு வர்றப்ப நான் குறட்டை விட்டுத் தூங்கிக் கிட்டிருந்தா நம்மளோட எதிர்கால திட்டம் வீணாயிடுமே? இப்ப என்ன செய்யறது?”
”ராஜாவா ஆவறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஆகணும். குறட்டை ஆய்வுக்கு நீதிபதிகள் வரும் போது நல்லா தூங்கற மாதிரி நடிக்கணும். ஆனா தூங்கக் கூடாது” என்ற நரியின் யோசனையை ஏற்றுக் கொண்டது புல்லன்.
இரவு புல்லன் தூங்காமலிருக்க ஒரு யோசனையையும் கூறியது குறுக்கன்.
”என் மனைவி சூப்பரா சூப் தயாரிப்பா. பத்து கப் சூப்ப சாயங்திரம் பையன்கிட்ட கொடுத்தனுப்பறேன். ராத்தி பத்துமணிக்கப்புறம் அரைமணிக்கொரு தரம் ஒரு கப் சூப் சாப்பிட்டா தூக்கம் கிட்டவே வராது” என்ற குறுக்கனின் யோசனையைக் கேட்டு மகிழ்ந்தது புல்லன்.
புல்லனும், குறுக்கனும் இந்த முறையும் தங்களின் சுற்றுப்புறத்தை மறந்ததால், அவைகளின் உரையாடல் குடிசையின் பக்கத்தில் இரை தேடிக் கொண்டிருந்த கண்ணப்பனின் நெருங்கிய நண்பன் கண்டன் காக்கையின் காதுகளில் விழுந்தது. அது தான் கேள்விப்பட்ட செய்தியைச் சொல்ல கண்ணப்பனைத் தேடிப் பறந்தது.
அன்று இரவு குறுக்கனின் மகன் கொண்டு வந்து கொடுத்த சூப்பை ருசி பார்த்துவிட்டு, ”ஆகா! அற்புதம்! இருந்தாலும் அவசரப்படக் கூடாது. பத்து மணிக்கு மேலதான் அரைமணிக்கொருதரமா சாப்பிட ஆரம்பிக்கணும்” என்று சூப்பை பாத்திரத்துடன் அடுப்புதணலில் பத்திரப்படுத்தியது. “பத்து மணி வரைக்கும் கொஞ்சம் தூங்கி எழுந்துட்டா பிறகு விடிய விடிய முழிச்சிருக்கலாம்’ எனும் சிந்தனையில் கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்தது புல்லன்.
அந்த நேரம் கண்ணப்பனின் வேண்டுகோளின் படி ஓசையில்லாமல் வீட்டினுள் நுழைந்த கண்டன் காகம் அடுப்பின் மேலிருந்த சூப்பில் தூக்க மாத்திரைகளைக் கலக்கியதை அது அறியவில்லை.
இரவு முழுவதும் காடு முழுவதும் வீடு வீடாக சென்று மிருகங்களின் குறட்டை ஆய்வைச் செய்து முடித்த நீதிபதிகள், தங்களின் ஆய்வு முடிவை பொழுது விடிந்ததும் அறிவித்தனர்.
”குறிஞ்சாங்காட்டுல குறட்டை விடாதவங்க ஒருத்தர் கூட இல்லைன்ற எங்களோட உண்மையான ஆய்வின் அடிப்படையில, குறட்டைப் பழக்கம் சகஜமாகிப் போன காட்டுல இன்றைய ராஜா குண்டப்பன் மேலும் ராஜாவா நீடிக்கறதுல தவறில்லை. குறட்டையில குண்டப்பனுக்கு இணையா இருக்கும் புல்லனை “குறட்டையே விடாதவர்’னு பொய் சொல்லி சிபாரிசு செய்த குறுக்கனுக்கு ஆறுமாத காலம் இந்தக் காட்டை இரவுக் காவல் காக்கணும்னு நாங்க உத்தரவிடுகிறோம்.”
அப்போது, புல்லன், குறுக்கன் இரண்டின் சதித்திட்டம் குறித்து தான் அறிந்ததையும், புல்லன் குடிக்க வைத்திருந்த சூப்பில் தூக்க மாத்திரையைக் கலந்தக் குற்றத்திற்காக நீதிபதிகளிடம் மன்னிப்பும் கேட்டது கண்ணப்பன்.
கண்ணப்பன் மூலம் புல்லன், குறுக்கன் இருவரின் சதியைப் புரிந்து கொண்ட நீதிபதிகள், புல்லன் மந்திரியாக நீடிக்க தகுதி இழந்ததைச் சுட்டிக் காட்டினர். புல்லனின் இடத்திற்கு கண்ணப்பன் பொருத்தமாக தெரிவதாக முன் மொழிந்தனர்.
”பதவி ஆசைக்காக நான் எதையும் செய்யவில்லை” என்று தன்னைத் தேடி வந்த மந்திரி பதவியை மறுத்த கண்ணப்பன், புல்லனுக்குப் பதிலாக மந்திரி பதவிக்கு அறிவு, அன்பு, அடக்கம் அனைத்திலும் சிறந்த குரங்கு குதூகலனை தன்னலமின்றி சிபாரிசு செய்தது. கரடி கண்ணப்பனின் பெருந்தன்மையைப் பாராட்டி மகிழ்ந்த மற்ற மிருகங்கள், கண்ணப்பனின் சிபாரிசு நபரான குரங்கு குதூகலனை ஆரவாரமாக வரவேற்றனர்.
குரங்கு குதூகலனை மந்திரியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி துதிக்கை தூசாமணி, ராஜா குண்டப்பன் வெட்கப்படும் வகையில் ”இனியாவது ராஜா தனது தூக்கத்தையும், குறட்டையும் குறைத்துக் கொள்வது காட்டுக்கு நல்லது!” எனக் கூறியதை கேட்டு, அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.