சிந்திக்க ஒரு செய்தி



வெற்றி எப்போது வரும் ?



வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தால் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராளமான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும்.

இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக் கொண்டால், அவன் பாதிக் குருடனாகி விடுகிறான் என்கிறது, ஜென் தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்?

அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள். இந்தக் கணம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும்.

புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இதை விளக்க ஜென்னில் ஓர் அழகான சம்பவம் உண்டு.

சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். "இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?” என்றான்."அதற்கென்ன பத்து வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்” என்றார் குரு. 'என்னது, பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே. மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்'.

"அப்படியானால் இருபது வருடங்களாகும்” என்றார் சான்ஸூ.

சீடன் திகைத்தான். 'போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்' என்றான்.'அப்படிச் செய்தால், நாற்பது வருடங்களாகுமே' என்றார் குரு. ஆம், உங்களை வருத்திக் கொள்ள வருத்திக் கொள்ள - நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிகக் காலமாகும். இதைத்தான் சான்ஸூ அந்தச் சீடனுக்குப் புரியவைத்தார்.

கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால், அதன்சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்தபோதுதான் நிகழ்ந்திருக்கின்றன.

மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான் ஆப்பிள் விழுவதைக் கவனித்தார் நியூட்டன். புவியீர்ப்பு பற்றிய விதியைக் கண்டுபிடித்தார். 'பாத் டப்'பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருந்தபோதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்தார் ஆர்க்கிமிடீஸ்.

டென்ஷனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்யும்போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் செயலாற்றும்.

கவனித்துப் பாருங்கள். விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிகப் படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

வெற்றி வெற்றி.. என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள். உடல் தானாக வேகமாக உழைக்கும். ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள்? உங்கள்மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், உடலில் வேகம் குறைந்துவிடுகிறது.

முடிவைப் பற்றிய கவலையை விடுங்கள். ஒவ்வொரு முறையும் முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள். வெற்றி தானாக உங்கள் கதவை வந்து தட்டும்.