சிறுவர் கதைகள்



                                                                                      கைத்தொழில் 



சிறிது  காலத்திற்கு முன்பு மகத நாட்டை ராமதத்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவரது மகன் சோமதத்தன். ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ளும்படி மகனிடம் கூறினார் மன்னர் இதையடுத்து சோமதத்தன் கம்பளம் நெசவு செய்யும் தொழிலை கற்றுக்கொண்டான். விரைவில் அந்த தொழிலில் சிறந்த திறமையும் பெற்றான்.அவன் தயாரிக்கும் கம்பளங்கள் கலை நயம் மிக்கதாகவும், அபூர்வமான வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தது.

இளவரசன் சோமதத்தனுக்கும்,அங்கத நாட்டு இளவரசி சாயா தேவிக்கும் திருமணம் நடைபெற்றது.சாயா தேவி புத்திசாலித்தனமிக்கவள்.இவளுக்கும் பல்வேறு கலைகளில் தேர்ச்சி உண்டு.

 ஒரு நாள் இளவரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். புலி ஒன்றை துரத்திச் சென்ற போது தனது படை வீரர்களை பிரிய நேரிட்டது . அத்துடன் அவன் வழி தவறி காட்டின் இன்னொரு பகுதிக்குச்சென்று விட்டான்

அங்கு திருடர் கூட்டம் ஒன்று இருந்தது . அந்த கூட்டத்திடம் இளவரசன் சிக்கிக்கொண்டான் . அவர்கள் பயங்கரமான கொள்ளையர்கள் . அவர்களிடம் யாராவது சிக்கினால் , பொருட்களை பிடுங்கிக் கொண்டு அவர்களை கொன்றுவிடுவது வழக்கம்.

அது போல இளவரசனிடம் இருந்து நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த பின்னர் அவனை கொல்ல முயன்றனர்.

அப்போது அவர்களிடம் இளவரசன் கெஞ்சினான் . தனக்கு நெசவுக்கலையின் நுணுக்கம் தெரியும் என்றும் , அவன் தயாரித்துக்கொடுக்கும் கம்பளங்களை விற்றாள் அதிக பணம் கிடைக்கும் என்றும் கூறினான். இதையடுத்து அவனுக்கு உயிர்பிச்சை அளித்தனர்.

 மேலும் கம்பளம் நெசவுசெய்யும் பணியும் கொடுக்க பட்டது . இளவரசன் விதவிதமாக கம்பளங்கள் செய்து கொடுத்தான் அவை நல்ல விலைக்கு விற்றன. இதையடுத்து கொள்ளைக்கூட்டத் தலைவன் மகிழ்ச்சி அடைந்து இளவரசனிடம்  மேலும் கம்பளங்கள் நெசவு செய்யும்படி கூறினர். இளவரசனும் அதன்படி விதவிதமான கம்பளங்கள் செய்தான்.

 இதற்கிடையில் இளவரசனை காணாமல் மன்னனும் , இளவரசியும் கவலை அடைந்தனர். படை வீரர்களை பல இடங்களுக்கும் அனுப்பி இளவரசனை தேடினார்கள். 

இந்த நிலையில் ஒரு நாள் கடை வீதிக்கு தோழியுடன் இளவரசி சென்றாள் . அங்கு ஒரு கடையில் இருந்த கம்பளத்தை பார்த்ததும் இளவரசி ஆச்சரியம் அடைந்தாள் . அது இளவரசன் தயாரித்தது என்பதை அவள் அறிந்து
கொண்டாள். 

உடனே அந்த கடைகாரரிடம் அதுபற்றி விசாரித்தாள். பக்கத்து நாட்டில் இருந்து சிலர் இதை கொண்டு வந்ததாக அவன் தெரிவித்தான்.

இளவரசி அந்த கம்பளத்தை வாங்கிப்பார்த்தாள். அதில் சில ரகசிய குறியீடுகளும், வரைபடங்களும் மறைந்து இருப்பதை புரிந்து கொண்டாள் . தான் எந்த இடத்தில் சிறை வைக்கப் பட்டிருக்கிறேன் என்பதை இளவரசன் ரகசியமாக அதில் வரைந்து இருந்தான். 

இதன்படி அந்த இடத்திற்கு படைகளை அனுப்பினார் மன்னர் . படைகளும் அங்கு சென்று கொள்ளைக்கும்பலை விரட்டியடித்து விட்டு இளவரசனை மீட்டு வந்தனர். 

இளவரசனின் புத்திசாலித்தனம், அதை புரிந்து கொண்டு செயல்பட்ட இளவரசியின் அறிவுத்திறன் இரண்டும் சேர்ந்து கொள்ளையர்களிடம் இருந்து இளவரசனை காப்பாற்றியது.