முல்லா கேட்ட கேள்வி
ஒரு சமயம் முல்லா ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார்.வழியில் ஓரிடத்தில் யாரோ ஒருவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து மக்கள் திரளாகக் கூடி அவர், கூறுவனவற்றை செவி மடுத்த வண்ணம் இருந்தனர்.
ஒரு சமயம் முல்லா ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார்.வழியில் ஓரிடத்தில் யாரோ ஒருவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து மக்கள் திரளாகக் கூடி அவர், கூறுவனவற்றை செவி மடுத்த வண்ணம் இருந்தனர்.
''யார் அவர் இங்கே என்னே பேசுகிறார்? ''என்று கூட்டத்திலிருந்த ஒருவரை முல்லா விசாரித்தார்.
அதற்கு'' இவர் பெரிய மகான். மக்களின் வினாக்களுக்கு இவர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்.
இதைக் கேட்ட முல்லா ஓரிடத்தில் அமர்ந்து அந்த மகான் பேசிய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டார்.
அந்த மகான் ஓரளவுக்கு விஷய ஞானம் தெரிந்த மேதையாக இருந்தாலும், தனக்கு தெரியாதது உலகத்தில் எதுவுமே இல்லை என்பது போன்ற ஆணவம் அவர் பேச்சிலே பிரதிபலிப்பதை முல்லா கவனித்தார்.
பேச்சின் முடிவாக அந்த மகான், '' உலகத்தில் என்னைவிட அறிவாளியே கிடையாது. எவ்வளவு சிக்கலான கேள்வியாக இருந்தாலும் என்னுடைய அறிவாற்றலால் எந்தக் கேள்விக்கும் எளிதாக என்னால் பதில் சொல்லிவிட முடியும்'' என்று கர்வத்தோடு சொன்னார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த முல்லா, அந்த மகான் முன் நின்றார்.
''என்ன சமாச்சாரம்? ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?'' என்று அந்த மகான் கேட்டார்.
''ஆமாம், நான் ஒரு சந்தேகக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்'' என்றார் முல்லா.
இதைக் கேட்ட மகான் அட்டகாசமாக சிரித்துக்கொண்டு, என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளும். உடனே பதிலளிக்கிறேன்'' என இறுமாப்புடன் கூறினார்.
உடனே முல்லா ''ஓர் இரவில் கதவு மூடியிருக்கும் ஒரு வீட்டிற்க்குள் இருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளை திருடுவதற்கு வழி என்ன ?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
உடனே முல்லா ''ஓர் இரவில் கதவு மூடியிருக்கும் ஒரு வீட்டிற்க்குள் இருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளை திருடுவதற்கு வழி என்ன ?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
இந்தக் கேள்வியைக் கேட்ட மகான்,ஆச்சரியமும், திகைப்பும் அடைந்து, ''உமக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? ஒரு திருடனிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறாயே ''என்று கடுஞ்சினத்துடன் முல்லாவின் மீது சீறி விழுந்தார் அந்த மகான்.
''ஒரு திருடனிடம் கேட்க வேண்டிய கேள்வியை,உங்களிடம் கேட்கக் கூடாது என்று தாங்கள் முன்னதாகச் சொல்லவில்லையே. என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதாகத்தானே அறிவித்தீர்கள். அந்த வகையில் தான் , நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டேன். இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா, முடியாதா? அதை முதலில் கூறுங்கள்'' என முல்லா குரல் எழுப்ப,
முல்லாவின் கேள்வி தனது அகங்காரத்திற்கே கிடைத்த அடியென உணர்ந்த அந்த மகான், தனது தவறை உணர்ந்து அந்த ஊரை விட்டே சென்றார்.
