முல்லா கதைகள்


                                                

                                               முல்லா கொடுத்த கோழி விருந்து



முல்லாவுக்கு வேண்டிய கிராமத்து விவசாயி ஒருவர், ஒரு நாள் முல்லாவை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் ஒரு பெரிய கோழியை பரிசாகக் கொடுத்து விட்டுச் சொன்னார்: ''கிராமத்திலிருந்து எனது நண்பர்கள் பலர் வருவார்கள். அவர்களை உபசரித்து வைத்தால் போதுமானது' என்றார். பின் முல்லாவும் அவருடைய மனைவியும் அந்தக் கோழியை சுவையாக சமைத்து உண்டு மகிழ்ந்தார்கள்.

சில நாட்கள் கழித்து, முல்லாவின் வீட்டுக்கு வந்த ஒருவர், முன்பு கோழி பரிசளித்தவருடைய நெருங்கிய நண்பர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

 ''அப்படியா மிக்க மகிழ்ச்சி " என்று வரவேற்ற முல்லா வந்தவருக்கு நல்ல உணவளித்து உபசாரம் செய்து அனுப்பி வைத்தார்.

 இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு மனிதர் முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அவரும், ''நான் கோழி பரிசளித்தவரின் நண்பனுக்கு நண்பன்''என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவரையும் உபசரித்து அனுப்பி வைத்தார் முல்லா.

இதன்பின் இரண்டு,மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றொருவர் வந்து ''கோழி பரிசளித்தவரின் நண்பனுக்கு,நண்பனுக்கு ,நண்பன் ''என்று கூறிக்கொண்டு வந்தார்.இவ்வாறு ஒருவர்பின் ஒருவராக ஆட்கள் வருவதைக்கண்டு, இதற்கு ஒரு நல்ல முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார் முல்லா.

பின்பு முல்லா வந்தவரை பிரமாதமாக வரவேற்று அமரச் செய்து,தயவுசெய்து கொஞ்ச நேரம் காத்திருங்கள்.அருமையான கோழி சூப் தயாராகிக் கொண்டிருக்கிறது. ருசித்து சாப்பிட்டு விட்டுச் செல்லலாம்''என்று கூறிவிட்டு முல்லா சமையலறை நோக்கிச் சென்றார். அங்கு தமது மனைவியிடம் ஏதோ சொல்லிவிட்டுத் திரும்பினார்.

சற்று நேரத்திற்குப் பிறகு முல்லாவின் மனைவி ஒரு கோப்பையைக் கொண்டுவந்து ''சூப் தயாராகிவிட்டது,சாப்பிடுங்கள் '' என்று புதிதாக வந்தவரின் முன் மேசையின் மீது வைத்து விட்டுச் சென்றாள். முல்லா அந்த புதிதாக வந்தவரிடம் ''சூப் சூடாக இருக்கிறது பார்த்துச் சாப்பிடுங்கள் '' என்று கூறினார்.

விருந்தாளி நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு ஆவலோடு சூப்பை எடுத்துக் குடிக்க முற்பட்டார். அடுத்த கணமே அவருடைய முகம் மாறுதலடைந்தது. ''என்ன முல்லா அவர்களே, இது சூப்பாக இல்லையே, வெறும் சுடு நீராக இருக்கிறதே? என்று ஏமாற்றத்தோடு கேட்க அதற்கு முல்லா,'

'நண்பர் அவர்களே உங்களுடைய நண்பருக்கு, நண்பருக்கு, நண்பரான அன்பர் கொடுத்த கோழியிலிருந்து தான் இந்த சூப் தயாரிக்கப்பட்டது. கோழி பரிசளித்தவரின் நண்பர்கள் இங்கே வரும்போதெல்லாம், அவர் கொடுத்த கோழியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப்பைத் தான் கொடுக்கிறேன். இன்று நீங்கள் அருந்திய சூப்பும் கூட, அந்த கோழியிலிருந்து தயாரிக்கப்பட்ட சூப்பினுடைய,சூப்பினுடைய ,சூப்பினுடைய ,சூப்பாகும்.அதனால் தான் இந்த சூப் சுடுநீர் போலிருக்கிறது'' என்றார், வந்த விருந்தாளியோ,மெல்லவும் முடியாமல்,முழுங்கவும் முடியாமல் அந்த சூப்பைக் குடித்து விட்டு, சொல்லாமல்,கொள்ளாமல் போய்விட்டார். அதற்குப் பிறகு முல்லாவின் வீட்டுப் பக்கம் யாருமே வரவில்லை.